கபிஸ்தலம், பிப். 11- கும்பகோணம் கழக மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலம் கிராமத்தில் 25.01.2025 அன்று அந்தி முதல் விடியல் வரை கபிஸ்தலம் தந்தை பெரியார் அறிவியல், கலை,பண்பாடு, விளையாட்டு மன்றம் சார்பில் 19 ஆம் ஆண்டு விழாவாக தமிழ் மக்கள் கலை விழா – 2025 நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் சுவரெழுத்து விளம்பரங்கள் எழுதப்பட்டு இருந்தது வழக்கமான ஒன்றாகும். பல வண்ணங் களில், பல அளவுகளில் தந்தை பெரியார் உருவத்துடன் தமிழ் மக்கள் கலை விழா-2025 என சுவரொட்டிகள் பரந்தும் விரிந்தும் ஒட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கபிஸ்தலம் கிராமத்தை நெருங்கும்போதே சாலையின் இருபுறமும் பிரமாண்டமான பெரியார் கைத்தடியுடன் நடந்து வரும் காட்சி கொண்ட உருவ பேனர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு விழாவின் சிறப்பை எடுத்துக்கூறியது.
விழா அரங்க நுழைவு வாயிலில் பனையோலை அலங்கார வளைவுடன், வாழை மரங்கள் மற்றும் கரும்புக்கழிகளால் ஆன வரவேற்பு அலங்காரங்கள் வருகைபுரிந்தோரை வியக்க வைத்தது. அரங்கில் நுழைந்தவுடன் இடது பக்கம் பண்டாரவடை ஜனாப் ஏ.ஹபீப் நினைவு உணவு விருந்து நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஏராளமான மக்கள் இவ்விருந்தினை மகிழ்வுடன் உண்டார்கள்
இவ்விருந்து நடைபெறும் பண்டாரவடை ஜனாப் ஏ.ஹபீப் அரங்கினை ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரின் இந்திய அரசின் கைவினை மற்றும் கைத்தறி ஏற்றுமதிக் கழக கிளை மேனாள் அலுவலர் சேலம் வீரமணி ராஜு அறிமுகப்படுத்தி திறந்து வைத்தார்கள்.
தொடர்ந்து உணவு விருந்தினை திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி நடிகரும், நிலா புரமோட்டர்ஸ் உரிமை யாளருமான தொழிலதிபர் துரை.சுதாகர் தொடங்கி வைத்தார்.
20000 பேருக்கு சூடான இட்லி, சுவையான பொங்கல், பொன்னிற ஊத்தப்பம், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பாருடன் வழங்கப்பட்டது.
உணவு அரங்கில் உண்டவர்கள் கைகழுவி வந்தவுடன் குறிச்சி தமிழ் பால் நிறுவனத்தாரால் வழங்கப்பட்ட சூடான சுவையான பனங்கற்கண்டு பால் வழங்கப்பட்டதை பருகி விட்டு அருகிலுள்ள ஆண், பெண் என பிரிக்கப்பட்டிருந்த அரங்கினுள் நுழைந்து நாற்காலிகளில் அமர்ந்தனர்.
வலதுபுறம் உணவு விருந்து வழங்கப்படும் இடத்திற்கு எதிரில் தஞ்சாவூர் பிரவுசர் புத்தக அரங்கினரால் அமைக்கப்பட்டிருந்து. புத்தக அரங்கினை மேனாள் ரோட்டரி உதவி ஆளுநரும், மேலக்காவேரி காவேரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி தாளாளருமான எஸ்.சவுமிய நாராயணன் திறந்து வைத்து சிறப்பித்தார்கள். ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்கள் அரங்கினை பார்வையிட்டு நூல்களை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
அடுத்து அமைக்கப்பட்டிருந்த மருதம் இயற்கை அமைப்பினரது தயாரிப்பில் சூடான சிறுதானிய முருக்கு, இனிப்பு உருண்டை, சுக்குநீர், விளையில்லா நிலவேம்பு குடிநீர் மற்றும் சிறுதானிய பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு சிறப்பாக விற்பனை நடைபெற்றது.
இவ்வரங்கினை மேனாள் ரோட்டரி ஆளுநரும், கும்பகோணம் பாலாஜி குழுமங்கள் உரிமையாளருமான ஏகேஎஸ். எஸ் பாலாஜி திறந்து வைத்து விற்பனையை தொடங்கிவைத்தார்கள்.
தொடர்ந்து குடந்தை திராவிடர் கழக பொறுப்பாளர் காமராஜ் அவர்களின் தயாரிப்புகளான கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், கடலை உருண்டை என பலவகை தயாரிப்புகள் சலுகை விலையில் வழங்கப்பட்டது.
இதனை அடுத்து பெரியார், அண்ணா நூல்கள் விற்பனை கடையில் சிறப்பாக விற்பனையாகிக்கொண்டிருந்தது.
மாலை 05.45க்கு பாராளுமன்ற உறுப்பினர் சு.கல்யாண சுந்தரம் அவசர பணிநிமித்தமாக செல்ல வேன்டியிருந்ததால் கலைவிழாவை தாம் தொடங்கி வைத்துவிட்டு செல்வதாக முன்னரே தெரிவித்துவிட்டு வருகை தந்தார். முன்னதாக அவர் தாரை, எக்காலம், கொம்பு கருவிகளின் வரவேற்பு முழக்கத்துடன் வரவேற்கப்பட்டார்.
முதலில் சென்ற ஆண்டு பாராட்டு பெற வேண்டிய மாவட்ட திட்ட குழு துணைத்தலைவர் தாமரைச்செல்வன் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் சிறப்பு செய்து வாழ்த்துரை வழங்கி தொடங்கி வைத்தார்.
தமிழிசை கச்சேரி
மாலை 06.00 மணிக்கு பாவை கீர்த்தனா& கீபோர்டு ஹரி குழுவினர் வழங்கிய தமிழிசை நடைபெற்றது.
மாலை 06.30 மணிக்கு தஞ்சை பாண்டியராஜன் குழுவினரின் நையாண்டி மேளம் நடைபெற்றது.
மாலை 06.50க்கு முனைவர் கோமதி சங்கர் குழுவினரின் கரகாட்டம் நடைபெற்றது.
இரவு 07.20க்கு திருவாரூர் தமிழ்வேந்தன் வழங்கிய காவடியாட்டம் நடைபெற்றது.
இரவு 07.40க்கு தஞ்சாவூர் பானுமதி இராசரெத்தினம் குழுவினர் வழங்கிய பொய்க்கால்குதிரையாட்டம் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்கள் அமர்சிங், வீரமணிராஜு, சவுமியநாராயணன், எஸ்.பாலாஜி, துரை.சுதாகர், பேராசிரியர் ப.திருநாவுக்கரசு, பெரியார் பெருந்தொண்டர் தி.ம.நாகராசன் ஆகியோர் தாரை,கொம்பு,எக்காலம் முழங்கிட அழைத்து வரப்பட்டார்கள்.
சுயமரியாதை வீரர் விசுவநாதன் படத்திற்கு மரியாதை
07.30 மணிக்கு அரங்கில் நுழைந்த சிறப்பு விருந்தினர் திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் முன்னதாக தஞ்சையிலிருந்து வருகைபுரியும்போதே வழியில் இருந்த சுயமரியாதைச் சுடரொளி கபிஸ்தலம் தி.கணேசன் அவர்களது இல்லத்திற்கு சென்று அங்குள்ள தந்தை பெரியார் சிலைக்கும், தி.கணேசன் மற்றும் அந்த குடும்பத்தின் முதல் சுயமரியாதை வீரர் பெரியார் பெருந்தொண்டர் விசுவநாதன் படத்திற்கும் மாலை அணிவித்தார். அவர்களது குடும்பத்தின் சார்பில் பொம்மி கணேசன்,அறிவொளி, தூய்மை, ஆதவன் ஆகியோர் வரவேற்றனர்.
கபிஸ்தலம் பாலக்கரையில் ஒன்றிய தலைவர் தங்க. பூவானந்தம் தலைமையில் ஒன்றிய செயலாளர் சு.கலியமூர்த்தி, பக அமைப்பாளர் திருஞானசம்மந்தம் மற்றும் மாவட்ட, ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் பொதுச் செயலாளரை வரவேற்று விழாவுக்கு அழைத்து வந்தனர்.
அரங்கில் அமைக்கப்பட்டிருந்த அனைத்து அரங்கிற்கும் ஆர்வமுடன் சென்று கண்டு மகிழ்ந்த பொதுச்செயலாளர் உணவு தயாரிக்கும் அரங்கிற்கு சென்று பார்த்து சமையல் கலைஞர் குருவை அழைத்து பாராட்டினார்.
நலம் விசாரிப்பு
85 வயது பெரியார் பெருந்தொண்டரும் துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் அவர்களின் பணித்தோழருமான கால்நடை மருத்துவர் துரைசாமியை அடையாளம் கண்டு நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
அரங்கின் முக்கிய வழியில் அழைத்துவரப்பட்ட பொதுச்செயலாளர் இருபக்கமும் கூடி இருந்த மக்களின் அன்பான வரவேற்பை ஏற்று மேடை முன்பு வந்து அமர்ந்தார்.
அங்கு அவருக்கு அமைப்பின் உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள், வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
அறிவு விருந்து
இரவு 08.00 மணிக்கு கலைவிருந்து இடைநிறுத்தப்பட்டு திட்டமிட்டபடி அறிவு விருந்து தொடங்கப்பட்டது.
அறிவு விருந்தில் பங்கேற்பவர்கள் மட்டும் மேடைக்கு அழைக்கப்பட்டு அமரவைக்கப்பட்டனர்.
1981இல் விளையாட்டுப்போட்டி நடத்தும் அமைப்பாக தொடங்கப்பட்டு படிப்படியாக ஒவ்வொரு காலத்திலும் பல்வேறு நிகழ்வுகளை, அமைப்புகளை தொடங்கி இன்றளவும் கபிஸ்தலம் தி.கணேசன் தான் மறைந்த பின்பும் சிறப்பாக செயல்படும்படி வழி நடத்திவும், தோழர்களை ஒருங்கிணைத்து கடந்த 21 ஆண்டுகளுக்கு முன் காவிரி, கொள்ளிட கரைகளில் வாழும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தந்தை பெரியார் அறிவியல், கலை, பண்பாடு,விளையாட்டு மன்றம் தொடங்கிய வரலாற்றை ஒருங்கிணைப்பாளர் வி.மோகன் சுருக்கமாக தெரிவித்தார். இவ்வமைப்பில் பல்வேறு கருத்துடையவர்கள் இருந்தாலும் தந்தை பெரியார் என்ற ஒற்றைப்புள்ளியில் தொடங்குவதை ஏற்றவர்கள் என்பதை குறிப்பிட்டார்.
வாழ்த்துகள்
இவ்வமர்வுக்கு தலைமையேற்ற தஞ்சை மாவட்ட கழக தலைவர் சி அமர்சிங் நேரத்தின் அருமை கருதி தந்தை பெரியார் அறிவியல், கலை, பணபாடு, விளையாட்டு மன்றம், செயல்பாடுகள் பற்றிய குறிப்பிட்டு தனது வாழ்த்துகளை தெரிவித்து முடித்தார்.
தொடர்ந்து உணவு அரங்கை திறந்து வைத்த சேலம் வீரமணி ராஜூ, புத்தக அரங்கை திறந்து வைத்த எஸ்.சவுமிய நாராயணன், சிறுதானிய அரங்கை திறந்து வைத்த மேனாள் ஆளுநர் எஸ்.பாலாஜி, உணவு விருந்தை தொடங்கிவைத்த துரை.சுதாகர் ஆகியோர் சிற்றுரையாற்றினர்.
கடந்த ஆண்டு பங்கேற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ரோட்டரி சங்கத்தையும், திராவிடர் கழகத்தையும் ஒப்பிட்டு ஆழமாக பேசியதை மேனாள் ரோட்டரி ஆளுநர் எஸ்.பாலாஜி குறிப்பிட்டுபெருமையோடு நினைவு கூர்ந்தார்.
விருது வழங்கும் விழா
அடுத்து சுயமரியாதைச் சுடரொளி கபிஸ்தலம் தி.கணேசன் நினைவு சமுதாயத் தொண்டர்-2025 விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு கபிஸ்தலம் பொம்மி கணேசன் குடும்பத்தார், மன்னை மாவட்ட கழக தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் ஆகியோர் மேடைக்கு அழைக்கப்பட்டனர்.
விருது பெறும் பெரியார் பெருந்தொண்டர் தி.ம.நாகராசன் பற்றிய வாழ்க்கை குறிப்பை பலத்த கரவொலிகளுக்கிடையே படித்து அவரது இயக்க பணிகள், சிறைவாசம்,போராட்டங்கள், சமுதாயப்பணி, பொதுப்பணி ஆகியவற்றை படித்துக்காட்டி இதனாலேயே இவருக்கு விருது வழங்கப்படுகிறது என ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
அவருக்கான பயனாடையை பொதுச்செயலாளர் அணிவித்து, விருதினை வழங்கி, விருது தொகை ரூபாய் 10000 வழங்கினார்.
தனது ஏற்புரையில் தனக்கும் அய்யாவுக்கும் உள்ள உறவு,இயக்க போராட்டங்கள், சிறைபடுதல், ஆசிரியருக்கும் தனக்கும் உள்ள அன்பு பற்றி குறிப்பிட்டு நன்றி கூறியதுடன் தனக்கு விருதுடன் வழங்கப்பட்ட தொகை ரூபாய் 10000/-அய் இவ்வன்மைப்புக்கு மனமகிழ்வுடனும் பெருமையுடனும் வழங்குவதாக குறிப்பிட்டு வழங்கினார்.
மாணவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது
இக்கல்வியாண்டில் இப்பகுதியில் மருத்துவக்கல்லூரியில் முதலாண்டு பயிலும் மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் சிறப்பு செய்யும்நிகழ்வு நடைபெற்றது.
மாணவர்கள்
கபிஸ்தலம் பா.ஆகாஷ்ராஜ், பாபநாசம், திருப்பாலைத் துறை பா.யாழினி, பாபநாசம், வங்காரம்பேட்டை கு.விவேக் ஆதித்யா, கோவிந்தகுடி அ.முகில்ராஜ், கோவிந்த்குடி ர.ஷகது, பாபநாசம், கஞ்சி மேடு சீ.சிறீதர்ஷினி, சுந்தரப்பெருமாள் கோவில் பாலமுருகன் மகா., மேட்டுத்தெரு பா.விக்னேஷ்வரன் ஆகியோர் பாராடப்பட்டனர்.
அவர்களுக்கு பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பயனாடை மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
பொதுச் செயலாளர் நினைவுப் பரிசுகள் வழங்கல்
பாராட்டும் நிகழ்வில் அய்யம்பேட்டை எஸ்.பிரதீப் எம்பிபிஎஸ் படித்து முடித்து 6 மாதத்திலேயே எம்டி படிப்புக்கான INICET தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்றதை குறிப்பிட்டு அவருக்கு வர இயலாமையால் அவரது பெற்றோர்கள் சிறப்பிக்கப்படனர்.
கல்வி வாய்ப்பே சாதாரணமாக கிடைக்காத நரிக்குறவர் சமூகத்திலிருந்து முதன் முதலாக பி.ஏ.பி.எட் படித்து தற்போது வேலை வாய்ப்புக்கு காத்திருக்கும் சிந்து மேடையில் அறிமுகம் செய்யப்பட்டபோது பெரும் கையொலி ஆரவாரம் எழுந்தது. அவருக்கு பயனாடை அணிவித்து நினைவுப்பரிசினை பொதுச்செயலாளர் வழங்கினார்.
கபிஸ்தலம் பெரியார் சேவை மய்யம் மூலம் குருதிக்கொடை, உடல்கொடை வழங்கிட பதிவுசெய்யப்பட்டு குருதிக்கொடை முகாம் அடிக்கடி நடத்தி தஞ்சை இராசா மிராசுதார் மருத்துவ மனைக்கு வழங்கப்படுகிறது.
சிறப்பான பணிக்காக பாராட்டு
அதுபோலவே கண்கள் கொடையாகப் பெறப்படுகிறது. அதனை அரவிந்த் கண்வங்கிக்கு கொடையாக வழங்கப்படுகிறது. அரவிந்த் கண் வங்கி தொழில்நுட்ப வல்லுனர்கள் து.தமிழரசன், மா.ஆதிகேசவன் ஆகியோரது சிறப்பான பணிக்காக பாராட்டப்பட்டனர்.அவர்களுக்கு பயனாடை மற்றும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.
உடற்கொடை வழங்கிய குடும்பங்கள் அழைக்கப்பட்டு அதுபற்றி மக்களிடம் விளக்கப்பட்டு தனது பெற்றோர்களின் உடலை கொடையாக வழங்கிய சுந்தரப்பெருமாள்கோவில் வாணி,ஹேமா ஆகியோரும், வலங்கைமான் இறையின்பன் ஆகியோரும் பொதுச்செயலாளரால் பாராட்டப்பட்டனர்.
68 முறை குருதிக்கொடை வழங்கிய தஞ்சை தீயணைப்புத்துறை அலுவலர் பொய்யாமொழி தேசிங்கு பொதுச் செயலாளரால் பாராட்டிடப்பட்டார்.
தொடர்ந்து கலை விழா சிறக்க கொடையளித்து உதவிடும் கொடையாளர்கள் 90 பேர் மேடைக்கு அழைக்கப்பட்டு பொதுச்செயலாளர் அவர்களால் சிறப்பு செய்யப்பட்டனர்.
தந்தை பெரியார் அறிவியல், கலை, பண்பாடு, விளையாட்டு மன்றம் உறுப்பினர்கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு மேடையில் பொதுச்செயலாளரால் பயனாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டார்கள்.
வாழ்த்துரை
தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிட மேனாள் சிங்கப்பூர் பேராசிரியர் தஞ்சை ப.திருநாவுக்கரசு விழா சிறப்புகளையும்,பெரியவர் தி.ம.நாகராசன் சிறப்புகளையும் குறுகிய நேரத்தில் சிறப்பாக குறிப்பிட்டார்.
பாராட்டு அரங்கின் இறுதியாக விழாப் பேருரை நிகழ்த்திய திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தான் மிகுந்த மகிழ்வோடும் நிறைவோடும் இருப்பதாக குறிப்பிட்டு கணேசன் அவர்களது தன்னலம் கருதாத உழைப்பு இப்பகுதியில் எப்படிபட்ட விளைச்சலை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் தொடர்ந்து இந்த அமைப்பு சிறப்பாக செயல்படவேண்டும் என்ற தனது விருப்பையும் தனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய அமைப்புக்கு நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.
நேரத்தின் நெருக்கடியிலும் விருதுபெற்ற திம.நாகராசனைப் பற்றி குறிப்பிட்டு விருது வழங்கிய கணேசன் குடும்பத்தாரையும், மன்னை ஆர்பிஎஸ்.சித்தார்த்தனையும் பாராட்டி விடைபெற்றார்.
தொடர்ந்து திருவெங்கனூர் ஐயாரப்பன் குழுவினர் வழங்கிய வானத்தில் வண்ணக்கோலமிடும் வான வேடிக்கை நடைபெற்றது. இரவு 09.50க்கு ஜக்குள் சகோதரர்களின் மின்னல் வேக நிகழ்வுகள் நடைபெற்றது.
பொம்மலாட்டம்
இரவு 10.15க்கு சென்னை பொம்மலாட்டக்கலைஞர் மு.கலைவாணனின் கலைஅறப்பேரவை வழங்கும் தொட்டான்…..கெட்டான்… என்னும் சமூக சீர்திருத்தக் கருத்துகளைக்கொண்ட பொம்மலாட்டம் மக்களை வெகுவாக ரசிக்க வைத்தது.
இரவு 11.15க்கு கோவை நிமிர்வு குழுவினர் வழங்கிய பறையாட்டம், பறையும் பரதமும், துடும்பாட்டம் நடைபெற்றது.ஒரே நேரத்தில் 80 கலைஞர்கள் பங்குபெற்ற இந்நிகழ்வு இம்மேடையின் தனிச்சிறப்பாகும்.
கிராமிய இசை நிகழ்ச்சி
இறுதியாக 12.30 மணிக்கு முனைவர் செந்தில் கணேஷ்- ராஜலெட்சுமி குழுவினரின் மண்மணம் மாறாத கிராமத்து மக்கள் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
பல்லாயிரக்கணக்கில் கூடியிருந்த இவ்விழாவுக்கு பாபநாசம் துணைக் கண்காணிப்பாளர் வழிகாட்டலில் கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் மிகச் சிறப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.
இதுவரை இல்லாத அளவுக்கு மிகச்சிறப்பாக பாதுகாப்பு பணியை செய்திருந்த காவல்துறையினரை பொதுமக்களும் வருகைபுரிந்த அனைவரும் பாராடியது குறிப்பிடத்தகுந்தது.
இறுதியில் அதிகாலை 03.30 மணிக்கு விழா சிறப்புடன் முடிவுற்றது. அனைத்து கட்சியினரும் வேறுபாடு கருதாது பொதுமக்களும் திரண்டு பல்லாயிரக்கணக்கில் பங்கேற்ற விழாவுக்கு தமிழ் நாடெங்கிலுமிருந்து காரிலும், வேனிலும் வருகை புரிந்தது, பங்கேற்றது, குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு: வி.மோகன்